சுகமளிக்கவும் தாய்ப்பால் கொடுக்கவும் மட்டும் தானா மார்பகங்கள்?

ஒரு தற்கொலை கடிதத்தை முதல் வரியிலிருந்து துவங்கலாமா அல்லது இறுதி வரியிலிருந்து துவங்கலாமா? முடியப்போகிற கதை தானே ஓர் முடிவின் வலி தானே முடிவுடனே துவங்கலாம்! “நான் இறக்கும் போது ஒரு கையில் கோடாரியும் இன்னொரு கையில் உளியும் பிடித்திருக்க வேண்டும் யார் என்ன சொன்னாலும் இதை நிறைவேற்று மகனே”.நான் இறந்துவிட வேண்டும்.

கண்ணாடி :
வாழ்ந்து முடித்த பிறகு, இதைச் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். 70 வயதொத்த கிழவி தற்கொலை செய்கிறாளாம். இன்னும் சில காலம் வாழ்ந்தால் தானாகவே இறந்துவிடுவாள் என்கிற உங்களது மனக்குரல் எனக்கு கேட்கிறது.
எனக்கு இயற்கை மரணம் வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. அகோரமான மரணத்தை வேண்டுகிறேன். நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளை சிறைபடுத்தி ஓவ்வொரு எழுத்தாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்தது போதும். இன்றுடன் போதும். எல்லாமே போதும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

தற்கொலையை தூண்டிய மருத்துவமனை :

தற்கொலையை தூண்டிய மருத்துவமனை :
வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. மருமகள் என்னை வேலை வாங்கவும் இல்லை மகன் என்னை மாசச் சாப்பாட்டிற்கு அலைய விடவும் இல்லை. அப்பறம் என்ன கிழவி பிரச்சனை என்று எரிச்சலடையாமல் தொடர்ந்து வாசியுங்கள். நான், பெண் என்கிற அடையாளம் தான் எனக்குப் பிரச்சனை ஆம், கிழவிக்குதான் இந்தப் பிரச்சனை.

நேற்று காலையிலிருந்து அதிகப்படியான மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஒரு வேலையும் ஓடாமல் சுருண்டு கிடந்த என்னை என் பேத்தி தான் வம்பாக அனத்தி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள்.
ஒரு கையில் பேத்தியின் கையை இறுக்கப்பிடித்திருந்தேன் மறுகையில் படியேறுகிற கம்பி. கருமம் ஏன் தான் வயதாகித் தொலைக்கிறதோ என்று வெறுப்பாய் இருந்தது. எழுந்து வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் தலைச்சுற்றல்,குமட்டல் என ஏதோ ஆகிக் கொண்டேயிருந்தது.

கண்ணாடி :
எப்படியோ எழுந்து சுவற்றை பிடித்துக் கொண்டு மெல்ல நடந்தேன். என் பின்னால் பேத்தி வந்துகொண்டிருந்தாள். கீழே இறங்க வேண்டிய படியை மேலிருந்து பார்த்த நேரத்தில் தலைச்சுற்றல் அதிகமானது. அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி, மிகுந்த ஜாக்கிரதையுடன் ஒவ்வொரு படியாய் இறங்கினேன்.

பொறுமைசாலி என் பேத்தி மெதுவாக எதுவும் சொல்லாமல் என்னுடனே வந்து கொண்டிருந்தாள். கடைசி படியில் கால் வைக்கும் போது என்ன ஆனதென்றே தெரியவில்லை சுருண்டு விழுந்துவிட்டேன்.
தூரத்தில் பாட்டி… எந்திரி பாட்டி… என்ற குரல் மட்டும் கேட்கிறது. சுற்றிலும் ஜனம்… முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது சுயநினைவுக்கு வந்ததும் கேட்ட முதல் குரல் ‘சுருக்கு பைடா’மச்சி….

சுர்ர்…. என்று வலித்தது. உள்ளே அழைத்துச் சென்று ஊசி போடப்பட்டது. மாத்திரை கொடுக்கப்பட்டது. இப்போது தலைச்சுற்றல் எல்லாம் இல்லை. நார்மல் ஆகிவிட்டிருந்தேன். ஆனால் அந்த வார்த்தை ‘சுருக்குப் பை’மீண்டும் மீண்டும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதுவும் அவன் சொன்ன தொனி, அந்த அலட்சியப் பார்வை எல்லாம் சேர்த்து என்னை எதோ செய்தது.
கிழவியின் வார்த்தைகளில் :

கிழவியின் வார்த்தைகளில் :
என் அம்மாவுக்கு நான் ஆறாவது குழந்தை. தலைப்பிள்ளையாக ஒரு பெண் அடுத்து வரிசையாக ஆண், ஆறாவதாக நான் பிறந்தேன். பிறந்ததும் என்னை தூக்கிய கிழவி ஒருத்தி சொல்கிறாள்.. நல்லா எடுப்பாத்தான் இருக்கு.. அடியே உன் மவ சீக்கிரம் சடங்காயிருவா யக்கா பேத்தி… என்று என் பாட்டியின் கைகளில் திணித்தாள்.
ஆம்… நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் யூகித்தது சரி. ஆம் நான் என் மார்பகத்தைப் பற்றி தான் சொல்கிறேன். இந்த பூமிக்கு வந்த நொடியிலிருந்தே அதனை நான் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அது வெறுப்பாக துவங்க வில்லை. தாழ்வு மனப்பான்மையாகவே என்னுள் வளர்ந்து இப்போது அது வெறுப்பாக மாறிவிட்டிருக்கிறது.

தொடரும் கதைகள் :
அன்று எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாட வேளை.. வாத்தியார் வந்து ஏதோ ஒரு கேள்வி கேட்க பதில் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றேன்.. என்னோடு இன்னும் சிலரும் நின்றனர். நீண்ட பிரம்பால் வரிசையாக அடித்துக் கொண்டே வந்தவர் என் முறை வந்ததும் குச்சியை கை மாற்றிவிட்டு பேச்சுக் கொடுத்துக் கொண்டே என் மார்பை பிடித்து கிள்ளினார்.
அவ்வளவு தான் நான் படிப்பிற்கு தடை சொல்லிவிட்டேன். யாரிடமும் சொல்லும் தைரியம் இல்லை எப்படி இன்னொருவரிடம் இதைச் சொல்வது என்று கூட தெரியவில்லை எனக்கு அப்போது. இது தவறு என்று கூட தெரியவில்லை வலித்தது. வலிக்கிற மாதிரி வாத்தியாரு கிள்ளுனாரு என்று மட்டும் சொல்லத்தெரிந்தது. அதற்கு மேல் யாரும் கேட்கவும் இல்லை நானும் சொல்லவுமில்லை.

தாவணிக்கனவுகள் :
தீபாவளிக்கு தாவணி எடுக்க ஜவுளி கடைக்குச் சென்றோம், இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கியும் ஒன்றும் அமையவில்லை. பெரிய கடைத்தெரு பக்கம் போய் பார்த்தால் நிச்சயம் கிடைக்குமென்று அங்கே சென்றோம். பெண் பிள்ளைகள் போடும் சட்டைகளை அப்போது தான் முதன் முதலாக பார்க்கிறேன்.
வாசலில் ஒரு பொம்மைக்கு மாட்டிவிருந்தார்கள். அந்த பொம்மையை பார்த்தே பெரிய கடை போல என்று நினைத்து உள்ளே சென்றோம். அம்மாவிடம் அதே மாதிரியான சட்டையை தீபாவளிக்கு கேட்க, ஏற இறங்க பார்த்தாள்.. எதுக்கு ஆசப்படணும்னு வெவஸ்த்த இல்ல இப்டி தொறந்து போட்டு போய்ருவியா நீ என்று திட்டிவிட்டு தாவணியே எடுத்துக் கொடுத்தாள். வருத்தமான தீபாவளி அது.

ஒன்றல்ல இரண்டல்ல :
எத்தனையோ சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்தேறினாலும் பிறந்து அடுத்து நொடி கேட்ட வார்த்தையினாலோ என்னவோ என் மார்பகத்தைப் பற்றி பேசுவது பேசப்படுவது எல்லாமே என்னுள் தாழ்வு மனப்பான்மையாக சேர்ந்து கொண்டேயிருந்தது.
வியர்வை நாற்றம் பிடுங்க கூட்டத்தில் நெருக்கி நிற்கும் பேருந்துகளில், ஆரம்பித்து நான் சென்ற ஒவ்வோர் இடங்களிலும் என் மார்பகத்தால் நான் அவமானங்களை சந்தித்த இடங்கள் கூனிக்குறுகி நின்ற இடங்கள் ஏராளம்.

திருமணம் :
திருநெல்வேலி பூர்வீகமான எனக்கு சேலத்திலிருந்து மாப்பிள்ளையை கண்டுபிடித்து கூட்டி வந்தார்கள். எங்கள் ஊர் ஜமீன் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. என் கழுத்தில் தாலியேறிய ஐந்தாம் நாள் என் உடமைகளோடு சேலத்திற்கு புறப்பட்டுவிட்டேன்.
இதுவரை டவுனுக்கு கூட சென்றிராத நான் இப்போது வெளியூருக்கு போகப்போகிறேன் என்ற சந்தோசமே என்னை உற்சாகமாக வைத்திருந்தது. எல்லாம் அன்றைய தினம் இரவு வரை மட்டுமே. முதலிரவில் கணவர் என்னவர் கேட்ட வார்த்தை.. என்னடி இவ்ளோ சிறுசா… என்று சொல்லி முடிப்பதற்குள் நான் விலகிக் கொண்டேன். புதுமணத்தம்பதிகள் என்பதால் சில மணி நேரத்தில் சமாதானமாகிவிட்டோம்.

கண்ணாடி :
கண்ணாடி முன்பாக நின்று அழுது அழுது என்னையே சபித்துக் கொள்வேன். நீ ஏன் பெண்ணாக பிறந்தாய்? இதனால் தான் எனக்கு வேண்டாம் எவனோ ஒருவனுக்கு சுகமளிக்க அவனுக்கும் எனக்கும் பிறக்கப்போகிற பிள்ளைக்கு உணவுளிக்க மட்டுமே பயன்படும்.

இதனால் எனக்கு என்ன பயன்? அவமானத்தையும் அழுகையையும், வெறுப்பையும், தாழ்வு மனப்பான்மையையும் தவிர வேறு என்ன கொடுத்து விட்டது. கணவரின் அன்பை மட்டுமே நம்பி வந்த எனக்கு அவரிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது என்பதை விட மிகப்பெரிய பயத்தையும் உண்டாக்கிவிட்டது.
அதைப் பற்றியே சிந்திப்பது அதற்காக மருந்துகளை சாப்பிடுவது என்று பைத்தியமாகிவிட்டிருந்த நேரத்தில் தான் கருவுற்றேன்.

தாய்ப்பால் :
குழந்தைகளுக்கும் அமுதூட்டும் மார் என்று ஏடுகளில் ஏற்றி வைத்து கொண்டாடியது போதும் அந்த வெற்றுப்புகழ்ச்சி எனக்கு வேண்டாம். குழந்தை வயிற்றிலிருக்கும் போது அதன் வளர்ச்சியை அதன் அசைவுகளை உணர்வதை விட என் மார்பு தளர்கிறது என்ற நினைப்பே எனக்கு அதிகமிருந்தது. குழந்தை பிறந்த பின்பு சரியாக பால் கூட கொடுக்க முடியவில்லை. பயம்…. எல்லாமே பயம்.
பாலும் கட்டிக் கொண்டு வலியெடுத்தது பிரசவ வலியை விட மிகக் கொடூரமான வலி அது. நாளாக நாளாக கட்டியும் வளர்ந்தது. மருத்துவமனைக்கு சென்றால் எங்கே ஆண் மருத்துவர் இருந்துவிடுவாரோ என்று பயந்தே தட்டிக்கழித்தேன். முற்றிய நிலையில் பல கி.மீ., தொலைவில் பெண் மருத்துவர் இருக்கும் மருத்துவமனையாக பார்த்து தேடிச் சென்றோம்.

கொடூரம் :
என்னை சோதித்தவள் கடுமையாக திட்டினாள் அஜாக்கிரதையாக இருக்கிறீர்கள் என்று மாமியாருக்கும் திட்டு. முதலில் கைகளால் மார்பில் கட்டிய பாலை எடுக்க முயற்சி செய்கிறேன் என்றாள் தொட்டாலே வலிக்கிறது என்று சொல்லியும் கேட்காமல் பிடித்து அழுத்தினாள் வீறிட்டு கத்துவதை கேட்டு அந்த முயற்சியை விட்டுவிட்டாள். பின் வாய் வைத்து உறிஞ்சி துப்புகிறேன் என்றாள். வலிக்கத்தான் செய்யும் ஒரு பொம்பளையா இருந்துட்டு இது கூட பொறுக்கலான்னா எப்பிடி என்று சொல்லிக்கொண்டே தன் வேலையை தொடர அதுவும் வேலைக்கு ஆகவில்லை.பெண்ணானவள் வலியை ஏற்று, பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்ன?
கடைசியாக கத்தியைக் கொண்டு அறுத்து செப்டிக் ஆகிவிட்டிருந்த கட்டிய பாலை எல்லாம் வெளியே எடுத்து மருந்து போட்டு அனுப்பினார்.
கொடூரம் :

கொடூரம் :
ரணக்கொடூரமான நாட்கள் அவை. ஒழுங்காக ஆடை அணிய முடியது. பிள்ளை அழுகும் போது தூக்க முடியாது. எப்படியோ ஆறு மாதகாலம் மிகுந்த சிரமப்பட்டேன். இரண்டாவது குழந்தையின் போது கொஞ்சம் தைரியம் வந்து தாராளமாக பால் கொடுக்க பழகிவிட்டேன்.

எப்போது பால் சுரந்து ஒழுகும் என்றே தெரியாது அரக்கப் பறக்க தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு பல முறை பால் புகட்டியிருக்கிறேன். சில நேரங்களில் வலிக்கவும் செய்யும் அதைச் செய்யவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அப்பப்பா எத்தனை சங்கடங்கள்.

எதோ ஒரு பத்திரிக்கையில் மாராப்பு போட அனுமதி வேண்டி ஒருத்தி தன் மாரையே அறுத்துக் கொண்டாளாம். அதைப் படித்தவுடன் அடி பைத்தியமே மாரே வேண்டாமென்றல்லவா நீ அறுத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
முடிவு :

முடிவு :
இப்படி நான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை என் மார்பை பற்றிய விமர்சனங்கள் கேலி, கிண்டல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
பெண்மையை போற்றுவோம். அவள் புனிதமானவள், சுகமளிக்கிறாள், குழந்தை பெற்றுக் கொடுக்கிறாள் என்று எட்ட நின்று பச்சாதாபம் காட்டுவதும் அடுத்த நொடியே ஆனாலும் நல்லா மாம்பழம் மாதிரி இருக்கு என்று கேவலமாய் விமர்சிப்பதும் எங்களுக்கு தேவையில்லை.

கொடூரம் :
இவையெல்லாம் உங்களுக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை. எப்படியாவது நான் எழுதிருப்பதின் சாரத்தையாவது உங்களுக்கு புரிய வைத்திட வேண்டுமென பேத்தியின் உபாயத்தில் சொல்கிறேன்
I HATE MY BREAST
எல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் அந்த கோடாரியும் உளியும்?…. கோடாரி என் மார்புகளை அறுத்தெறிவதற்கு. உளி என் மார்பை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு.

Related posts:

கொழுக்கொழு கன்னங்கள் வேண்டுமா? இந்த பயிற்சி செய்யுங்க
பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து
மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்? அதில் மறைந்திருக்கும் அதிசயிக்கும் உண்மை ரகசியம்!
டீ என்கிற தேநீர் பற்றிய – சில அதிர்ச்சி உண்மைகள்…!
நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்!
இந்த காய்கறிகள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...